“மேற்காசியப் போர் நெருக்கடியிலும் தடையற்ற பெட்ரோல் விநியோகம்”: மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் பாராட்டு!
புதுடெல்லி:
மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தற்போதைய மத்திய அரசு கையாண்டு வரும் விதம் குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வியந்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சசி தரூர் மற்றும் மணிஷ் திவாரி பாராட்டு:
மத்திய அரசு மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழ்ந்துள்ளார். அதேபோல், மற்றொரு மூத்த தலைவரும் எம்பியுமான மணிஷ் திவாரி, “தூதரக ரீதியிலான உறவுகளில் மத்திய அரசு எடுத்துள்ள சரியான நிலைப்பாடே இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க உதவியுள்ளது” எனப் பாராட்டியுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடற்ற நிலை:
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவிய நிலையில், “மத்திய அரசு நிலைமையைத் திறம்படக் கையாண்டு வருகிறது; நாட்டில் எங்குமே எரிவாயு தட்டுப்பாடு இல்லை” என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு:
மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ (Operation Sindhur) நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது மேற்காசியப் போர் விவகாரத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருவது அக்கட்சிக்குள் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக மூத்த தலைவர்கள் பாராட்டுத் தெரிவிப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளால் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தடையின்றித் தொடர்வது, சாமானிய மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.




