தென்காசியில் பரபரப்பு: திமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு எதிர்ப்பு – பெயிண்ட் டப்பாவை உதைத்து தள்ளிய திமுக ஒன்றிய செயலாளர்!
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் சுவர் விளம்பரம் செய்த ஊழியர்களை திமுகவின் ஒன்றிய செயலாளரே மிரட்டி விரட்டியடித்த சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் மாற்றத்தால் அதிருப்தி:
ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில், சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் இந்த முடிவிற்கு உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்கனவே அதிருப்தி நிலவி வந்தது.
திமுக நிர்வாகியின் ஆக்ரோஷமான செயல்:
இந்நிலையில், முதலியார்பட்டி பகுதியில் திமுக ஊழியர்கள் சுவர்களில் ‘உதயசூரியன்’ சின்னம் மற்றும் வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பெயரை வரைந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடையம் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வேட்பாளருக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பரபரப்பான வீடியோ:
ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், ஆத்திரத்தில் அங்கிருந்த பெயிண்ட் டப்பாவைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளினார். மேலும், ஊழியர்களை அங்கிருந்து மிரட்டி விரட்டியடித்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சொந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது, ஆலங்குளம் தொகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.




