“என்டிஏ வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம்”: அண்ணாமலை உறுதி!
கண்ணூர்:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்வதே தனது முக்கியப் பணி என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தேர்தல் காலப் பயணத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கட்சித் தலைமை தனக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 7 முதல் 23-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார். கட்சித் தலைமை தனக்கு அளித்துள்ள இந்தப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றி, கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யப்போவதாக அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.





