கோவை கக்குராயன் மலைப் பகுதியில் சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!
கோவை:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் மற்றும் கக்குராயன் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாகத் தொடர்ந்து நடமாடி வரும் சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிறுத்தை நீண்ட நாட்களாகப் பிடிபடாமல் இருப்பது அப்பகுதி பொதுமக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “தேர்தல் நேரம் என்பதற்காக, மக்களின் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்து அவர்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது” என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழக வனத்துறை உடனடியாகத் தலையிட்டு, விஞ்ஞானபூர்வமான தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு வலைகளை அமைத்துச் சிறுத்தையைப் பிடித்து மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.




