“ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தண்டனை கொடுப்பார்” – திமுக அரசு மீது இபிஎஸ் கடும் தாக்கு!
சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாகக் கோயில் விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
சீர்குலைந்த சட்டம்-ஒழுங்கு:
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டதாகக் குற்றம்சாட்டிய இபிஎஸ், “ஒரு மாநிலத்திற்கு நிரந்தரமான டிஜிபியைக்கூட நியமிக்க முடியாத நிலையில் இருக்கும் இந்த விடியா அரசு நமக்குத் தேவையா?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
கோயில் காணிக்கை சர்ச்சை:
பழனி கோயில் வளர்ச்சி நிதி குறித்துப் பேசிய அவர், “பழனி முருகன் கோயில் வளர்ச்சிக்குப் பக்தர்கள் மனமுவந்து கொடுத்த காணிக்கைப் பணத்தை, அரசு தனது மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது முறையற்றது. பக்தர்களின் காணிக்கையை ஏன் அரசுத் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
நகைகள் உருக்கம் – கடும் விமர்சனம்:
தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியும் கோயில் நகைகளைத் தொட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், தற்போதுள்ள திமுக அரசு கோயில் நகைகளை உருக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். “ஆண்டவன் சொத்தை அபகரிக்க நினைக்கும் ஸ்டாலின் அரசுக்கு அந்த ஆண்டவனே தக்க தண்டனையை வழங்குவார்” என ஆவேசமாகத் தெரிவித்தார். ஆண்டவன் சொத்தில் கைவைக்கும் இத்தகைய செயல்கள் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.





