“தமிழகத்திலும் எஸ்ஐஆர்… வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” – முதல்வர் ஸ்டாலின் உறுதி
தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறை சவால்களால் நிரம்பியதாகவும், இது பா.ஜ.க.வுக்குச் சாதகமான சதியாகத் தெரிகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,
“தேர்தல் நெருங்கிய நிலையில், அதுவும் பருவமழைக் காலத்தில் எஸ்ஐஆர் நடத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது. அவசரகதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாக மாறக்கூடும்,” என அவர் கூறியுள்ளார்.
மேலும், “பிஹாரில் ஏற்கனவே பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் பெருமளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன,” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் எஸ்ஐஆர் குறித்து, “கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதனையடுத்து நவம்பர் 2ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் தனது பதிவை “மக்களின் வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை தூண். அதனைப் பறிக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு அனுமதிக்காது — ஜனநாயகத்துக்காக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என உறுதியுடன் முடித்துள்ளார்.