தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலின்படி, சேலம் மேற்குத் தொகுதியில் கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளர் இரா.அருள் போட்டியிடுகிறார்.
வந்தவாசி தொகுதியில் பொதுச்செயலாளர் முரளி சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், கும்பகோணம் தொகுதியில் மாநில நிர்வாககுழு உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின், விருத்தாசலம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் இ.கே.சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் மாவட்டச் செயலாளர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முக்கிய நிர்வாகிகள் அடங்கிய இந்தப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, பாமகவினர் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர்.




