“சத்தியம் வாங்கி வாக்கு கேட்கும் திமுக” – சீமான் கடும் விமர்சனம்
“திமுகவினர் தங்களின் சாதனைகளைப் பேசாமல், சத்தியம் வாங்கி வாக்கு கேட்பதிலேயே ஈடுபட்டுள்ளனர்,” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள அவர்களின் நினைவிடத்தில் இன்று சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக வெற்றி பெறும் என்று எப்படிக் கூற முடியும்? அதைக் குறித்து முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். எந்தப் பிரிவுமோ குழப்பமோ இல்லாமல் நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு வாழும் நிலை இல்லை; அது சுடுகாடாக மாறிவிடும்.”
“விவசாயிகள் இன்று 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படாமல் சாலையில் கிடப்பதாகக் கண்ணீர் வடிக்கின்றனர். 75 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கிடையில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று தீபாவளி பரிசு வழங்கி, சத்தியம் வாங்கி வாக்கு கேட்கின்றனர். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதற்குப் பதிலாக, சத்தியத்தின் பெயரில் வாக்கு கேட்கிறார்கள்.”
“அரசு நெல்லுக்கு நியாயமான விலையைக் கொடுக்கவில்லை. ஆனால் நினைவுச்சின்னங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது. மதுபானக் கடைகளுக்காக ஏசி அறைகள் அமைக்கப்படுகிறது; ஆனால் உணவுப் பொருட்கள் சேமிப்பதற்கான கிடங்குகள், பள்ளிகள் அமைக்கப்படவில்லை. இது மக்கள் பணத்தை வீணடிக்கும் ஆடம்பர ஆட்சியாக மாறியுள்ளது,” என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது:
“சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்தில் நியாயமாக நடக்குமா என்பது சந்தேகமே. அதில் சதி இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என திமுக கூறுகிறது; ஆனால் மாநில உரிமையைப் பற்றி பேசுகிறது. அதேசமயம் திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆளும் கர்நாடகா அரசு இத்தகைய கணக்கெடுப்பை ஏற்கனவே நடத்தியுள்ளது,” என்று சீமான் தெரிவித்தார்.