SIR விவகாரம்: திமுகவுடன் இணைந்து அதிமுகவும் எதிர்க்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை எதிர்த்து, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில், குழுத் தலைவராகவும் சிதம்பரம் தொகுதி எம்பியாகவும் உள்ள திருமாவளவன் தலைமையிலேயே இன்று கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கனவே முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன; அந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே வழக்கு தீர்ப்புக்கு முன், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது எங்கள் வலியுறுத்தல்.
இந்தக் கோரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி எதிர்பார்க்கிறது. இதை முதல்வர் பரிசீலிப்பார் என நம்புகிறோம். அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் திமுக தலைமையிலான ஒருங்கிணைப்பில் இணைந்து இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும். பீஹாரில் நடந்த வாக்குத் திருட்டு போன்ற மக்கள் விரோத நிலை தமிழ்நாட்டில் நிகழக்கூடாது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஒருமித்து நிலைப்பாடு கொள்ள வேண்டும்.”
மேலும் அவர் கூறியதாவது:
“அரசியல் தலைவர்கள் வழக்கமாக பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே சந்தித்து ஆறுதல் கூறுவதே வழக்கம். ஆனால் நடிகர் விஜய் அனைவரையும் சென்னைக்கு அழைத்து சந்தித்தது புதிய முயற்சியாகும். அதைப்பற்றி தனியாக கருத்து சொல்ல விரும்பவில்லை.”
“முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதுபோல், நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெறும் என மக்களின் விருப்பம் தெளிவாகத் தெரிகிறது. இப்போது திமுக தலைமையிலான கூட்டணியே ஒற்றுமையுடன் செயல்படுகிறது; மற்ற எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்பதே உண்மை.”
“பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளதால், அவர் தனது பங்கை வெளிப்படுத்தும் வகையில் சில கருத்துகளை கூறியிருக்கலாம். ‘திருமாவளவன் மூன்று முறை எம்பியாக இருந்தும் எதுவும் செய்யவில்லை’ என்று அவர் கூறியிருப்பது அதற்கான ஒரு எதிர்வினையாக இருக்கலாம். அதில் மேலும் கருத்து சொல்ல தேவையில்லை,” என்று திருமாவளவன் கூறினார்.