திமுகவில் வாய்ப்பு மறுப்பு: தவெக-வை அணுகிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு முட்டுக்கட்டை போட்ட பொதுச்செயலாளர்!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில், தென் மாவட்டத்தின் முக்கிய அமைச்சரான மனோ தங்கராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தூது விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் திமுக தலைமை அவருக்கு சீட் வழங்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், மனோ தங்கராஜ் தவெக-வின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துப் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகத் தெரிகிறது. இது குறித்து ஆதவ் அர்ஜுனா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திடம் ஆலோசித்தபோது, மனோ தங்கராஜை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என அவர் முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டபோது இதேபோல் தவெக-வை அணுகிவிட்டு, மீண்டும் அமைச்சரானவுடன் பின்வாங்கிய பழைய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி ஆனந்த் அதிருப்தி தெரிவித்ததாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






