தாவூத் இப்ராஹிம் புகழ் பாடும் ஸ்டிக்கர்: தமிழகப் பேருந்தை அதிரடியாகப் பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!
நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமைப் புகழ்ந்து வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்த தமிழகப் பதிவு எண் கொண்ட சுற்றுலாப் பேருந்து ஒன்றை கர்நாடக மாநில போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையிலிருந்து கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் நோக்கி 48 பொறியியல் மாணவர்களுடன் சென்ற அந்தப் பேருந்தில், “உண்மையான தாதா தாவூத் இப்ராஹிம்”, “கேங்ஸ் ஆஃப் மும்பை”, “உண்மையான கிரிமினல் டான்” போன்ற சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனைக்கண்ட போலீசார் உடனடியாகப் பேருந்தைக் கைப்பற்றி, அதிலிருந்த மாணவர்களைப் பாதுகாப்பாக மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள பேருந்து உரிமையாளரை விசாரணைக்கு வருமாறு கர்நாடக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.










