எழும்பூர் தனித்தொகுதி: தமிழன் பிரசன்னா வேட்பாளர் அறிவிப்பிற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!
சென்னை எழும்பூர் தனித்தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழன் பிரசன்னாவிற்கு, இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் எவ்வாறு தனித்தொகுதியில் போட்டியிட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில், மதம் மாறிய ஒருவருக்கு திமுக சீட் வழங்கியது முறையற்றது என அவர் வினவியுள்ளார். இந்து, பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்களைத் தவிர்த்து மற்ற மதங்களுக்கு மாறும் பட்டியலின மக்கள், தங்களது இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை அனுபவிக்க முடியாது என்கிற சட்ட நடைமுறையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை அண்மையில் உச்சநீதிமன்றமும் பல்வேறு உயர்நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார்.






