“திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என மக்கள் பேசுகிறார்கள்” – ஓ.பன்னீர்செல்வம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற மருது சகோதரர்கள் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பிரிந்து, பல்வேறு குழுக்களாகச் செயல்படுகின்றன. இதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,” என்றார்.
அதிமுக நிலைமை குறித்து பேசும் போது அவர் கூறினார்:
“அதிமுக இன்று இந்நிலைக்கு தள்ளப்படுவதற்கு ஆர்.பி. உதயகுமாரே காரணம். அவரின் கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. எவருடைய அரசியல் வாழ்க்கையும் மக்களின் தீர்ப்பில்தான் உள்ளது. மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே எதிர்கால கூட்டணிகள் அமைக்கப்படும்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
“அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் அனுபவம் அவரை அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் விதிமுறையை கொண்டு வரச் செய்தது. தற்போது அந்த விதிமுறையை மாற்றியுள்ளனர்; அதை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் நாங்கள் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.”
அத்துடன், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் சரியான முறையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.