விழுப்புரம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகிலுள்ள ஆலகிராமம் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
செக்கடி தெரு சந்திப்பில் மண்ணில் பாதியாக புதைந்த நிலையில் வைஷ்ணவி தேவி சிற்பம் கண்டறியப்பட்டது. நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காணப்படும் தேவியின் பின் கரங்களில் சங்கு, சக்கரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அலங்காரங்களுடன் மிகுந்த கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளாள்.
அதேபோல், செல்லியம்மன் கோயில் வளாகத்தில் காணப்படும் கௌமாரி சிற்பமும் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஆடை, அணிகலன்களுடன் புன்னகை முகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் சோழர் காலத்தின் சிறந்த கலைநயத்தைக் காட்டுகிறது.
இரண்டு சிற்பங்களும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என மூத்த தொல்லியலாளர் கி. ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு காலத்தில் இவை சிவன் கோயில் வளாகத்தில் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜெயினர் கோயில் தெரு பகுதியில் புதர்களால் மூடப்பட்ட இடத்தில் பௌத்த சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகம் பின்புலமாக காணப்படும் இந்த சிற்பம் அவலோகிதேஸ்வரர் என்பதைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் கூறினர். இதுவும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ. விஜயவேணுகோபால் கூறியதாவது:
“இந்த சிற்பம் விழுப்புரம் மாவட்டத்தில் பௌத்தம் ஒரு காலத்தில் பரவியிருந்ததற்கான முக்கிய சான்றாகும்.”
செங்குட்டுவன் மேலும் கூறியதாவது:
“ஆலகிராமத்தில் இதற்கு முன் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூதேவி, ஐயனார், முருகன், லகுலீசர், விஷ்ணு சிற்பங்கள் இருந்துள்ளன. இப்போது சோழர் கால சிற்பங்களும் கண்டறியப்பட்டிருப்பது, அந்தப் பகுதியின் வரலாற்று சிறப்பை வெளிப்படுத்துகிறது. இவை அனைத்தையும் மக்கள் பாதுகாப்புடன் காக்க வேண்டும்,” என தெரிவித்தார்.