ஆந்திர அதிகாரிகளால் விசைப்படகு பறிமுதல்: காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை!
சென்னை:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சென்னையைச் சேர்ந்த விசைப்படகை ஆந்திர மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 16-ஆம் தேதி, செந்தாமரை செல்வன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஸ்ரீஹரிகோட்டா அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஆந்திர எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி 7 பேரையும் ஆந்திர அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் விசாரணைக் கைதிகளாக இருந்த 7 மீனவர்களும் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகை மட்டும் அதிகாரிகள் திருப்பி ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விசைப்படகு உரிமையாளர் மற்றும் காசிமேடு அனைத்து மீனவர் சங்கத்தினர், பறிமுதல் செய்யப்பட்ட படகை உடனடியாக மீட்டுத்தர வலியுறுத்தித் துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






