மேற்காசியப் போர் பதற்றம்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் போர் சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களும், அதற்கு ஈரான் அளித்து வரும் பதிலடியும் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவது குறித்து ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில், இந்திய மாநிலங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் தயார் நிலை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, சர்வதேசப் பொருளாதாரத் தட்டுப்பாடுகளைச் சமாளிக்கவும், தற்போதைய சூழலில் ‘டீம் இந்தியா’ என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யவும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. போர்க்காலச் சூழலில் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் பேணுவதற்கான முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







