10 நாட்களில் ரோடு ஷோ விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, ரோடு ஷோக்களுக்கு ஒழுங்குமுறை விதிகள் தேவை என பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை எந்தக் கட்சிக்கும் ரோடு ஷோ அனுமதி வழங்கப்படமாட்டாது என விளக்கமளித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி, “அது அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமையை மீறுவதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு, பொதுக்கூட்டங்களுக்கு தடை இல்லை என தெரிவித்தது.
முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவும் வழக்கில் இணைக்க கோரிய நிலையில், தலைமை நீதிபதி அனைத்து கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், விதிமுறைகள் வகுக்காவிட்டால் நீதிமன்றம் தானே உத்தரவு பிறப்பிக்கும் என்றும் எச்சரித்தார்.
காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மருத்துவத்துறைகளின் ஆலோசனையுடன் விதிகள் தயார் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, விசாரணை நவம்பர் 11-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலைகள் தவிர பிற அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.