தொடர்ச்சியான கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், வேலூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து பெருமளவில் அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது.
பாலாற்றின் துணை ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்ததால், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வழியாகப் பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், சீறிப்பாயும் வெள்ள நீரை பார்த்து ரசித்தனர். பலர் தங்கள் கைப்பேசியில் காட்சிகளைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதேவேளை, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும், தண்ணீர் குறைந்துள்ளதாக நினைத்து ஆற்றை கடக்க முயலக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை தொடரும் சூழலில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.