நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வழிபாடு!
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆன்மீகப் புகழ்மிக்க நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் வீட்டு வாசல்களில் வண்ணமயமான பூ தட்டுகளை வைத்துச் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மின்விளக்குகளால் கண்கவர் முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முத்துமாரியம்மன் திருவுருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
ஊர்வலத்தின் போது, பக்தர்கள் அம்மன் மீது மலர்களைத் தூவி தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி நார்த்தாமலை பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியிருந்தது.










