வேலூரில் கனமழை காரணமாக மூன்று ஏரிகள் நிரம்பி, குடியிருப்புகளைச் சூழ்ந்த உபரிநீர்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் தாக்கத்தில் பல ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் உபரிநீர் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காட்பாடி பகுதியில் உள்ள கழிஞ்சூர், தாராப்படவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய மூன்று ஏரிகள் தற்போது நிரம்பி, அதன் உபரி நீர் கால்வாய்கள் வழியாக வெளியேறி அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
மழை காரணமாக பாலாறு ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் செல்லும் தண்ணீர் ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளுக்குத் திருப்பி விடப்பட்டதால், மாவட்டம் முழுவதும் உள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
காட்பாடி பகுதியில் 71 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போதிய கால்வாய் வசதி இல்லாததால், பாலாஜி நகர், பேங்க் நகர், அண்ணாமலை நகர், மதிநகர், கோபாலகிருஷ்ணன் நகர், அருப்புமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளும் வணிக நிறுவனங்களும் வெள்ளநீரால் சூழப்பட்டன.
பாரதி நகர் பிரதான சாலையிலும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், மக்கள் அவதியுற்றனர். இதையடுத்து, மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேற்பார்வையிட்டனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
மக்கள் தெரிவித்ததாவது:
“கனமழை பெய்யும் போதெல்லாம் இதே நிலை ஏற்படுகிறது. 2021 முதல் இந்த பிரச்சனை நீடிக்கிறது. ஏரி தண்ணீர் வீடுகளில் புகும்போது நாங்கள் கடும் அவதிக்குள்ளாகிறோம். அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் தீர்வு இல்லை. இனி நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்.”
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி கழிஞ்சூர் ஏரியும், உபரிநீர் வெளியேறும் கால்வாயையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளத் தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“வண்டரந்தாங்கல், தாராப்படவேடு, கழிஞ்சூர் ஆகிய ஏரிகள் நிரம்பியதால், உபரிநீர் தெருக்களில் புகுகிறது. இதைத் தடுக்க மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. நீர் வெளியேறும் கால்வாயை அகலப்படுத்த 5 பொக்லைன் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
இனி பாதிப்பு ஏற்படாமல் இருக்க ரூ.20 கோடி நிதியில் நிரந்தர கால்வாய் விரிவாக்கப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.”