தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு
ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறிச் சிறுவர்களைப் பயன்படுத்தியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மாவட்டச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையிலும், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், உத்தரகோசமங்கை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, த.வெ.க ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறுவர்களை ஈடுபடுத்தி திமுகவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளையோ அல்லது சிறுவர்களையோ ஈடுபடுத்துவது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால், இது குறித்துப் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், மலர்விழி மற்றும் அவருடன் தொடர்புடைய சில நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சியினர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ராமநாதபுரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








