தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வுகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 16 வரையிலும், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16 வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதியே தேர்வுகள் தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
தேர்வுகள் முடிந்த கையோடு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. மேலும், அடுத்த கல்வியாண்டிற்கான (2026-2027) பள்ளிகள் திறப்பு மற்றும் முதல் வேலை நாள் வரும் ஜூன் 1-ஆம் தேதி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






