1 லட்சம் வண்டல் தொட்டிகளில் குப்பைகள் அகற்றும் பணி தொடக்கம் – சென்னை மாநகராட்சி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் குப்பைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: மழைநீர் வடிகால்களில் நீர் தடையின்றி செல்லவும், சாலைகளில் உள்ள மிதக்கும் கழிவுகள் வடிகால்களில் புகாமல் தடுக்கவும், நகரம் முழுவதும் 5 மீட்டர் இடைவெளியில் 1,03,166 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழை தொடங்குவதற்கு முன் முதல்கட்ட சுத்தம் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 200 வார்டுகளில் இந்த தொட்டிகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழைக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக இந்த சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.