சத்குரு குறித்த அவதூறு செய்திகள்: நக்கீரன் இதழுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் அந்த அறக்கட்டளையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அவதூறு செய்திகளை உடனடியாக நீக்கக் கோரி, ‘நக்கீரன்’ ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தொடர்ந்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வந்ததாக நக்கீரன் இதழ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு, நக்கீரன் ஊடகம் வெளியிட்ட அவதூறு கட்டுரைகளை நீக்க வேண்டும் என்றும், வருங்காலங்களில் இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா மற்றும் சத்குரு குறித்த சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்க உத்தரவிட்டு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை ஈஷா அறக்கட்டளை மனதார வரவேற்பதாகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீதியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








