திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் – தமிழக அரசு பெருமிதம்
கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
2016–17 முதல் 2020–21 வரை, முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 1 கோடி 13 லட்சத்து 51,469 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதில், ஆண்டுக்கு சராசரியாக 22.70 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே வாங்கப்பட்டது.
ஆனால் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 முதல் 2024 வரை கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1 கோடி 70 லட்சத்து 45,545 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் முந்தைய ஆட்சியைவிட 19.91 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை 10.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் வாங்கப்பட்டுள்ளது. இதில் 8.77 லட்சம் மெட்ரிக் டன் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 1.63 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 57.63 லட்சம் சாக்குகள், 58 மெட்ரிக் டன் சணல் மூட்டைகள், மற்றும் 28,856 பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளன. மேலும், தினசரி 4,000 லாரிகள் மற்றும் 13–15 ரயில்கள் மூலம் சுமார் 35,000 மெட்ரிக் டன் நெல் கிட்டங்கிகளுக்கு நகர்த்தப்படுகின்றது.
“செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; விவசாயிகளுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.