திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை தாமே தொடர்ந்து விசாரிக்கப் போவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக, மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாகச் செயல்படுத்தவில்லை எனக் கூறி, கோயில் நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அனைத்து வழக்குகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவிற்கு மதிப்பளிக்கும் வகையில் தற்காலிகமாக விசாரணையை ஒத்திவைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தைத் தாமே தொடர்ந்து விசாரிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







