திரும்பப் பெறப்பட்ட தனியார் பல்கலை. சட்டத் திருத்தம் — தமிழக அரசின் முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் வரவேற்பு
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா, அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு முரணானது என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்வி உரிமையை பாதிக்கும் ஆபத்து உண்டு என்றும் பல தரப்புகள் எச்சரித்திருந்தன.
கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், அதன் நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது.”
மு. வீரபாண்டியன் மேலும் கூறியதாவது:
“மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவு, மக்கள் மன்றத்தில் வெளிப்பட்ட கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மறுபரிசீலனை செய்யப்படும் புதிய சட்டம், சமூகநீதிக் கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்து, உயர்கல்வி பொறுப்பை தமிழ்நாடு அரசு தானே ஏற்கும் திசையில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.