தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: நிர்பயா நிதிப் பயன்பாடு குறித்த சிறப்புத் தொகுப்பு
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2019-ல் 6,984-ஆக இருந்த குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை, 2022-ல் 9,207-ஆக உயர்ந்து, 2023-ல் 8,943 வழக்குகளாகப் பதிவாகியுள்ளது. சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், பெண்கள் பாதுகாப்பிற்காக மத்திய அரசு வழங்கிய ‘நிர்பயா நிதி’ தமிழகத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிதியின் கீழ், பாதுகாப்பான பொது இடங்கள், சிசிடிவி கண்காணிப்பு, அவசர உதவி மையங்கள் மற்றும் ‘Safe City’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 425.06 கோடி ரூபாயில், 353.69 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட போதிலும், மாநில அரசால் வெறும் 45.86 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
சென்னை காவல்துறையின் சில ரோந்துப் பணிகள் மற்றும் உதவி மையங்களுக்கு மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பிற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குற்றங்கள் பெருகி வரும் வேளையில், ஒதுக்கப்பட்ட நிதியைத் தேங்கவிட்டுள்ள அரசின் செயல்பாடு, பொதுமக்களிடையே அதன் செயல்திறன் குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.