நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் – அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை (அக். 27) வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பீஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக, அங்கு வாக்காளர் பட்டியலில் “சிறப்பு தீவிர திருத்தம்” (Special Intensive Revision – SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த செயல்முறையின் மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள், மற்றும் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. “இந்த நடவடிக்கையின் மூலம் ஆளும் பாஜகாவுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவளிக்கிறது” என குற்றம்சாட்டின. இதனை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
எனினும், உச்ச நீதிமன்றம் எந்தவித தடை அல்லது இடைக்கால உத்தரவையும் வழங்காமல், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடரலாம் என அனுமதி அளித்தது.
இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நாளை மாலை செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளனர். இதில் நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 10 முதல் 15 மாநிலங்களில் முதல்கட்ட எஸ்ஐஆர் (SIR) நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கடந்த 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.