தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்க ராமநாதபுரம் விவசாயி மகள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபுவின் மகள் ஜோதிமலர் (28) தாய்லாந்தில் நடைபெறவுள்ள மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 என்ற சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.டெக் பட்டம் பெற்ற ஜோதிமலர் தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தொழிலுடன் மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் புனேயில் நடைபெற்ற மிஸ் டூரிசம் அம்பாசடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் நாடு முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் ஜோதிமலர் சிறப்பாகப் பங்கேற்று மிஸ் டூரிசம் அம்பாசடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 பட்டத்தை வென்று சர்வதேச போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் 28-ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெறும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 போட்டியில் இந்தியாவைச் சார்ந்து அவர் கலந்துகொள்கிறார்.
இந்தியாவை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த ஜோதிமலர் கூறியதாவது:
“இந்தப் போட்டி உலக நாடுகளுக்கிடையே அமைதி, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் பாரம்பரியமும், பண்பாட்டும், மரபும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது,” என்றார்.