தருமபுரியில் 14 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் பறிமுதல்: கிருஷ்ணகிரியிலும் தேர்தல் பறக்கும் படை அதிரடி!
தருமபுரி:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தருமபுரியில் நகை பறிமுதல்:
தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே, வட்டாட்சியர் குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது வாகனத்தைச் சோதனையிட்டதில், அவரிடம் 104 கிராம் தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவியரசு என்பவர் தனது காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணம் அனைத்தும் தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் ரொக்கம் பறிமுதல்:
இதேபோல் அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியிலும் தேர்தல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 9 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, முக்கியச் சாலைகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.