தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் நடத்திய மாநில அளவிலான நீச்சல் போட்டி – வீரர்கள் அவதிப்பாடு
தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6வது ஜூனியர் மற்றும் 11வது சீனியர் மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் நேற்று வேளச்சேரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் 50 மீட்டர், 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் நிகழ்ச்சிகள் நடைபெறவிருந்தன. பங்கேற்பாளர்கள் காலை 6.30 மணிக்குள் வரவும், 7 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும், 9 மணிக்குள் பிரிவுகள் ஒதுக்கப்படும் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
மழையையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பெற்றோருடன் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். ஆனால், போட்டி ஒருங்கிணைப்பில் தேவையான ஏற்பாடுகள் போதாமையாக இருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நேரத்திற்கு தொடங்கப்படவில்லை.
மேலும் மழை காரணமாக ஐடி கார்டு வழங்கும் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டது. பிரிண்டர் பழுதடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வீரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
போட்டி இறுதியாக மாலையில் தொடங்கப்பட்டது. பல பிரிவுகள் ஒரே நாளில் முடிக்க வேண்டியிருந்ததால், போட்டிகள் அவசரகதியில் நடத்தப்பட்டன. இதனால் பல வீரர்களால் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை.
முந்தைய போட்டிகளில் பதக்கம் வென்ற சில வீரர்களும் இம்முறை தாமதம் மற்றும் சீரற்ற ஏற்பாடுகள் காரணமாக சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. இதனால் வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் மன வருத்தத்துடன் இடம் திரும்பினர்.