எலும்பு அடர்த்தி குறைவு, பக்கவாதம், உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
எலும்பு அடர்த்தி குறைவால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த ஓட்ட குறைவால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் உருவாகும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓட்டப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்.26) சென்னை நேப்பியர் பாலம் அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:
“இந்தியா முழுவதும் மருத்துவ விழிப்புணர்வில் முன்னணியில் திகழ்வது தமிழ்நாடு. முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை இந்தியாவின் மருத்துவ தலைநகராக மாற்றினார்.
பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை மருத்துவச் செலவுகளால் இழக்காமல் பாதுகாக்கும் நோக்கில் அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றி வருகிறது.
அதே வழியில் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏழை மற்றும் எளிய மக்களின் நலனை முன்னிறுத்தி, “மக்களைத் தேடி மருத்துவம்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டங்கள் மூலம் வீடு தேடி மருத்துவ சேவையை வழங்கி வருகிறார்.
மேலும், சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தவிர்க்க “இன்னுயிர் காப்போம் — நம்மைக் காக்கும் 48” என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்திற்கான சிகிச்சைச் செலவை அரசு ஏற்று வருகிறது.”
அரசு மேலும் தெரிவித்ததாவது:
“கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.”
இந்திய மருத்துவ சங்கத்தின் சென்னை கோடம்பாக்கம் கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.கே. சந்தீப், செயலாளர் டாக்டர் பிரியா கண்ணன், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.