தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு வந்தால், சட்டரீதியாக எதிர்கொள்ளும் – மு.க. ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R.) தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டால், அதனை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்காக வெளியிட்ட கடிதத்தில் அவர் கூறியதாவது:
“இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், ‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ எனப்படும் S.I.R. செயல்முறையை தமிழகத்தில் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பீஹார் மாநிலத்தில் இதே முறையில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாக்குரிமை நீக்கப்பட்டுள்ளதைப் பார்த்தால், அதே திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.”
ஸ்டாலின் மேலும் கூறியதாவது:
“இந்த நடைமுறையால் உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் போன்றோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி அ.தி.மு.க. அரசியல் லாபம் காணலாம் என நினைக்கின்றனர்.
ஆனால், மக்களின் நம்பிக்கையையும் நேர்மையான வாக்குரிமையையும் பறித்துக் கொண்டு வெற்றியைப் பெறும் முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றி பெறாது.”
திமுக, வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால், அதற்குரிய சட்ட வழிமுறைகள் மற்றும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இதனை மீறி ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அவற்றை சட்டரீதியாகவும் மக்களோடு இணைந்து களத்திலும் எதிர்கொள்வோம். அதற்கான வலிமை திமுகவிற்கு உண்டு,” என ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார்.