‘பைசன்’ பார்க்க நேரம் இருக்கிறது; விவசாயிகளை பார்க்க நேரமில்லையா? – முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து இபிஎஸ் விமர்சனம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை எதிர்த்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர் கூறியதாவது:
“நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது,” என்று தொடங்கியுள்ளார்.
திரைப்படங்களை பார்ப்பதிலும், கலைஞர்களை பாராட்டுவதிலும் தவறு இல்லை என்றாலும், “மக்கள் பிரச்சினைகளை புறக்கணித்து, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் முதல்வர்,” என்று அவர் குற்றம்சாட்டினார்.
“ஜெய்பீம் பார்த்து உள்ளம் உலுக்கியது என்று சொன்னவர், தன் ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்?
கூலி, பைசன் போன்ற படங்களுக்கு நேரம் ஒதுக்குகிற முதல்வருக்கு, மழையில் நெல் முளைத்துப் போன விவசாயிகளைப் பார்க்க நேரமில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், தென் தமிழகம் மழையில் பாதிக்கப்பட்டபோது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி புறப்பட்டதையும், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது திரைப்படம் பார்த்ததையும் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
“மழை மற்றும் புயல் காலத்தில் மக்களை காப்பதற்கான நெறிமுறைகளை வகுப்பதற்குப் பதிலாக, படங்களைப் பார்ப்பதில் நேரம் செலவிடுகிறார் முதல்வர். இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்துள்ளன — இதைப் பற்றிக் கவலைப்பட நேரம் இல்லையா?” எனவும் பதிவிட்டார்.
முடிவில்,
“விவசாயிகளின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு மக்களாட்சியின் சக்தியை விரைவில் உணர்த்தப் போகும் நாள் தொலைவில் இல்லை,” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.