தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு – விவசாயிகள் வலியுறுத்திய முக்கிய கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குருவை பயிர் சாகுபடி சுமார் 6.5 லட்சம் ஏக்கரில் நடந்துள்ளது. இதில் 80 சதவீத அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வந்து குவித்துள்ள நிலையில், போதிய அளவு லாரிகள் இல்லாததால், பல மையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
இதனால், விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் சுமார் ஒரு மாதமாக சிரமத்தில் உள்ளனர். இதற்கு மேலாக, அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, ஈரப்பத அளவு 17 சதவீதத்தை மீறியுள்ளது.
இந்த நிலையிலேயே, நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்தது.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தலா மூன்று அதிகாரிகள் கொண்ட மூன்று குழுக்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலுள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் பி.கே. சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச் மற்றும் ராகேஷ் பரலா ஆகியோர் இன்று ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
அங்கு நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பத அளவை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
ஆய்வின்போது விவசாயிகள் குழுவினரிடம்,
“ஒவ்வொரு ஆண்டும் குருவை, சம்பா பருவங்களில் இதே பிரச்சினை வருகிறது. மத்திய குழுக்கள் வந்து ஆய்வு செய்வதும், விவசாயிகளுக்கு கண்துடைப்பாகவே முடிகிறது. இப்போது நடந்த ஆய்வுக்கான அறிக்கையை விரைவாக சமர்ப்பித்து, மத்திய அரசு உடனடி முடிவை எடுக்க வேண்டும்,”
என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய குழு இன்று ராராமுத்திரகோட்டை, தெலுங்கன்குடிக்காடு, கீழகோயில் பத்து போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டது.