நாளை விஜய் சந்திப்பு: கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சென்னைக்கு புறப்பட்டனர்
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நாளை (அக். 27) மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார். இதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று (அக். 26) கரூரில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டனர்.
தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த 5 சொகுசு பேருந்துகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று மதியம் 12 மணியளவில் கரூரில் இருந்து புறப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தவெக சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க முடியாததால் விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர் நிவாரணத் தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.
பின்னர், குடும்பங்களை நேரில் சந்திக்க முடியாததால், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதன்படி, கடந்த சில நாட்களாக தவெக நிர்வாகிகள், குடும்பத்தினரிடம் சென்னைக்கு வர விருப்பமா எனத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தினர்.
இன்று காலை, ஏமூர்புதூர் பகுதியில் இருந்து சில குடும்பத்தினரை தவெக நிர்வாகிகள் கார் மற்றும் மினி வேன்களில் அழைத்துச் சென்றனர். அவர்களை கரூரில் வெண்ணெய்மலை அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் ஏற்றி அனுப்பினர்.
சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படாமல் இருக்க ஊடகங்கள் புகைப்படம் எடுக்க வேண்டாம் என தவெக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, இன்று மதியம் 12 மணிக்குள் 5 பேருந்துகள் சென்னைக்கு புறப்பட்டன. 27 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் விஜயை சந்திக்க சென்னைக்கு பயணமாகியுள்ளனர்.