திரிசூலம் இரட்டைக் கொலை: சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது – தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு!
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான இரட்டைக் கொலை வழக்கில், சிறுவர்கள் உட்பட 10 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, திரிசூலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரை, 12 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தி அபினேஷ், புவனேஷ், ஸ்ரீ ஹரி, பிரசாந்த், சரண், விஜய், சூர்யா, ஆகாஷ், தனுஷ் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தீபக் மற்றும் மற்றொருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.