“மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியர் விவகாரம் – திமுக கவுன்சிலர் தலையீட்டால் நடவடிக்கை இல்லை?” – சீமான் கேள்வி
சென்னையில் மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியர் விவகாரத்தில், திமுக கவுன்சிலர் தலையீட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னை புழுதிவாக்கம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பில் படிக்கும் 11 வயது மாணவி, வகுப்பறையில் பேனாவை திறந்தபோது மை சிந்தியதால், தலைமை ஆசிரியை இந்திராகாந்தி கடுமையாக ஆத்திரமடைந்து, தரை துடைக்கும் கட்டையால் சிறுமியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி தற்போது கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்தபோதும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் உள்ள திமுக கவுன்சிலரின் தலையீட்டா? அல்லது பாதிக்கப்பட்ட சிறுமி ஆதித் தமிழ்க்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலா காவல்துறை பாகுபாடு காட்டுகிறது?” என சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும், “சிறுமியை மிருகத்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.