“வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கே முன்னுரிமை”: திமுகவுடனான பேச்சுவார்த்தை குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம்!
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்த பின்னரே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு காங்கிரசுக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
குறிப்பாக, திமுக போட்டியிட விரும்பும் சில முக்கியத் தொகுதிகளைக் காங்கிரஸும் தனது விருப்பப் பட்டியலில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள 28 தொகுதிகளைத் துல்லியமாக அடையாளம் காண, சுமார் 42 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தயாரித்து வருகின்றனர். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் தயாராகி வருவதாகவும், அதில் வெற்றிபெறக்கூடிய சாதகமான தொகுதிகளைக் கேட்டுப் பெறப் போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தொகுதிகளை இறுதி செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதால், வரும் நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.