தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகை!
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தேனீக்களை அழிக்காமல், அவற்றைச் பாதுகாப்பாக மீட்டெடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சியுடன் கூடிய ஒத்திகை சேலத்தில் நடைபெற்றது. தேனீக்களின் சூழலியல் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை வழங்க வேண்டும் எனத் தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், சேலம் மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் கல்யாணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 70 தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர். குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் கொசு தேனீக்கள், அடுக்கு தேனீக்கள் மற்றும் மலைத் தேனீக்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பிடித்து, வனப்பகுதிகளில் விடுவிக்க வேண்டும் என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தேனீக்களை அழிக்காமல் இயற்கையைப் பாதுகாக்கும் இந்த முன்னெடுப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.