திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சிக்கல்: தேமுதிகவுக்கு இணையான இடங்களை கேட்கும் விசிக, கம்யூனிஸ்ட்கள்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் நடத்தி வரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு இணையாகத் தங்களுக்கும் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha) இடத்தை திமுக உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு 8 தொகுதிகளை வழங்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கூட்டணியில் நீடித்து வரும் தங்களுக்கு, தேமுதிகவை விடக் குறைவான தொகுதிகளை வழங்குவதை ஏற்க முடியாது” என விசிக தரப்பில் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக நிர்வாகி ஒருவர் பேசுகையில், தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இதே நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுத்துள்ளதால், திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு ‘மக்கள் நலக்கூட்டணி’ உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.