தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை: தமாகா மகளிர் தின விழாவில் ஜி.கே.வாசன் கடும் விமர்சனம்
சென்னை: தமிழகத்தில் பெருகி வரும் டாஸ்மாக் கலாச்சாரம் மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டம் காரணமாகப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கவலை தெரிவித்துள்ளார். சென்னை சிஐடி நகரில் தமாகா சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், போதைப்பொருட்களின் அதிகரிப்பால் பெண்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த விழாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுப் பெண்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகச் சமூக சேவை, கல்வி, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்குத் தமாகா சார்பில் கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டது. விழாவில் சிறப்புரையாற்றிய ஜி.கே.வாசன், மத்திய அரசின் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களால் நாடு முழுவதும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருவதைச் சுட்டிக்காட்டியதோடு, தமிழக அரசு போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகச் சாடினார்.