கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாம் தலைவர் படுகொலை: 6 பேர் கைது; தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் சிவகுமார் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 937 குடும்பங்கள் வசித்து வரும் இந்த முகாமில் தலைவராக இருந்த சிவகுமார் மீது, நேற்றிரவு புகுந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை குறித்துப் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அரசு தொகுப்பு வீடுகள் ஒதுக்குவது தொடர்பாக முகாமிற்குள் நிலவிய முன்விரோதம் காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாகக் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, சிவகுமாரின் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் 500-க்கும் மேற்பட்ட முகாம் வாசிகள் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.