நாங்குநேரி இரட்டைக் கொலை: ஆறுதல் கூறச் சென்ற செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ ஆகியோரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களின் உறவினர் என்று குற்றம் சாட்டிய கிராம மக்கள், குற்றவாளிகள் மீது கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் இந்தத் திடீர் முற்றுகை மற்றும் சரமாரி கேள்விகளால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க முடியாமல் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கிருந்து பாதியிலேயே திரும்பிச் சென்றனர். இரட்டைக் கொலைச் சம்பவத்தால் ஏற்கனவே சோகத்தில் மூழ்கியுள்ள அப்பகுதியில், அரசியல் தலைவர்களின் வருகைக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.