“அதிகார மமதையில் திமுகவினர்”: கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடி கட்டிய கார் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அகலமான தார் சாலையில் ஓரமாகச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மோதும் அளவிற்கு திமுகவினருக்குத் துணிச்சலும் அலட்சியமும் பெருகியுள்ளதாகச் சாடியுள்ளார். ஒரே நேரத்தில் அந்தப் பெண்ணின் உயிரையும், இன்னும் சில நாட்களில் பிறக்கவிருந்த சிசுவின் உயிரையும் காவு வாங்கியுள்ள இந்தச் சம்பவம் நெஞ்சை கனக்கச் செய்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
திமுகவினர் “உடன்பிறப்புகள்” என்ற போர்வையில் செய்யும் அராஜகங்கள் எல்லை மீறிச் செல்வதாகவும், ஆட்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இவர்களின் அதிகார மமதையால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல கனவுகளுடன் இருந்த ஒரு பெண்ணையும், பிறக்காத குழந்தையையும் கருவறுத்த திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், திமுகவினரின் இத்தகைய அராஜகப் போக்கு கடும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார்.