“சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி
உலக அரசியல் இனி ஒரு சில நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்காது என்றும், பல நாடுகள் அதிகார மையங்களாகத் திகழும் புதிய சூழல் உருவாகியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஒரு சில நாடுகள் மட்டுமே ஒப்பந்தங்களை உருவாக்கி, அதற்கு மற்ற நாடுகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பழைய நடைமுறைக்கு உலகம் இனி ஒருபோதும் திரும்பாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சர்வதேசச் சூழலில் அதிகாரங்கள் பல்வேறு நாடுகளிடையே பரவலாக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச ஒத்துழைப்பு என்பது இந்த மாற்றத்திற்கு ஏற்ப அமைய வேண்டுமே தவிர, அதை எதிர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் பரவல், உலக நாடுகளுக்கிடையேயான உறவுகளில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.