அடிப்படை வசதிகள் இல்லை: விருதுநகரில் திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பெண்கள் – போலீசாருடன் தள்ளுமுள்ளு!
விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்பகுதியில் நீண்ட நாட்களாகச் சரியான சாலை வசதி, குடிநீர் விநியோகம் மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், தகுதியுள்ள 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ கிடைக்கவில்லை என்றும், இது குறித்துப் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதிப் பெண்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்கச் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அங்கு வருகை தந்தார்.
அப்போது திரண்ட 80-க்கும் மேற்பட்ட பெண்கள், அவரைச் சந்தித்துத் தங்கள் குறைகளைக் கூற முற்பட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.