ஈரான் போர்: முடங்கியது முட்டை ஏற்றுமதி – நாமக்கல்லில் ₹14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம்!
நாமக்கல்: மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, நாமக்கல் மண்டலத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் முட்டை ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் விளைவாக, சுமார் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகக் கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் தினமும் கோடிக்கணக்கான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை வெளிமாநிலங்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வழக்கமாக வளைகுடா நாடுகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் வரை அனுப்பப்படும். ஆனால், போர் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீர்முனை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் ஏற்றப்பட்ட கப்பல்கள் ஆங்காங்கே கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் முட்டைகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, பண்ணையாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு தலையிட்டு மாற்று வழிகளை ஆராய வேண்டும் என நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.