தஞ்சை: விஜய் வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்து – சாலை விதிகளை மீறிய தொண்டர்கள் படுகாயம்!
தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தஞ்சையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்கச் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த தொண்டர்கள் சாலை விதிகளை மீறி அதிவேகமாகச் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக செங்கிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வாகனத்தில் புறப்பட்டார். வழியெங்கும் திரண்டிருந்த தொண்டர்கள், ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
தலைவர் விடுத்த வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல், பல தொண்டர்கள் ஹெல்மெட் அணியாமலும், ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டியும் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து பைக்குகள் மோதி விபத்து நேரிட்டது. இதில் பல தொண்டர்கள் காயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொண்டர்களின் இந்த ஆபத்தான செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.